நவகிரக தோஷங்களும் எளிய பரிகாரங்களும்…

சூரியன்:

ஒருவரின் ஜாதகத்தில் சூரியனால் தோஷம் ஏற்பட்டால், சூரிய தசை மற்றும் சூரிய புக்தி காலத்திலும் ஞாயிறன்றும் விரதம் இருந்து, வீட்டுப் பூஜையறையில் சூரிய பகவானின் திருவுருவப் படத்துக்குச் செந்தாமரை மலர்களால் ஆன மாலையை அணிவித்து, கோதுமையினால் இனிப்பு செய்து நைவேத்தியம் செய்து, சூரிய காயத்ரி பாராயணம் செய்தால் தோஷம் நிவர்த்தி ஆகும்.

சந்திரன்:

சந்திரனால் தோஷம் ஏற்பட்டால், சந்திர தசை மற்றும் சந்திர புக்தியில் திங்கட்கிழமை விரதம் இருந்து அம்பிகையின் திருவுருவப் படத்துக்கு வெள்ளை அரளி மலர்ச் சரம் சாத்தி, பால் அன்னம் நைவேத்தியம் செய்து, சந்திர காயத்ரியைப் பாராயணம் செய்து வந்தால் தோஷம் நிவர்த்தியாகும்.

செவ்வாய்

செவ்வாயால் தோஷம் ஏற்பட்டால், செவ்வாய் தசை மற்றும் புக்தி காலங்களில் செவ்வாய்தோறும் விரதம் இருந்து, செவ்வாய் பகவானுக்குச் செண்பக மலரால் அர்ச்சனை செய்து, வெண் பொங்கலும் துவரையும் நைவேத்தியம் செய்து, செவ்வாய் காயத்ரியைப் பாராயணம் செய்து, முருகப்பெருமானை வணங்கி வர செவ்வாய் தோஷம் நிவர்த்தி ஆகும்.

புதன்:

புதனால் தோஷம் ஏற்பட்டால், புதன் தசை, புதன் புக்தி காலங்களில், புதன்கிழமை விரதமிருந்து, வெண் காந்தள் மலர் தூவி, புளி சாதம் படைத்து, புதனின் காயத்ரி மந்திரத்தை 24 முறை பாராயணம் செய்து ஸ்ரீமகா விஷ்ணுவை வழிபட புத பகவானின் பரிபூரண அருளும், சிறந்த அறிவும், கல்வியும் பெறுவார்கள்.

குரு:

குருவால் தோஷம் ஏற்பட்டால், குரு தசை மற்றும் புக்தி காலங்களில், வியாழக்கிழமை விரதமிருந்து முல்லை மலர் தூவி, கொண்டைக் கடலையுடன் தயிர் சாதம் படைத்து, குரு காயத்ரியை 24 முறை பாராயணம் செய்து வழிபட வேண்டும். இதனால் குரு தோஷம் விலகி, சகல நன்மைகளும் பெறலாம்.

சுக்கிரன்:

சுக்கிரனால் தோஷம் ஏற்பட்டால், சுக்கிர தசை மற்றும் புக்தி காலங்களில், வெள்ளிக்கிழமை விரதமிருந்து, வெண்தாமரை மலரிட்டு, நெய் சாதம் நைவேத்தியம் செய்து, சுக்கிர காயத்ரியை 24 முறை பாராயணம் செய்வதுடன், மகாலட்சுமியை வழிபட, சுக்கிர தோஷம் நிவர்த்தி ஆகும்.

சனி:

சனியினால் தோஷம் ஏற்பட்டால், சனி தசை மற்றும் புக்தி காலங்களில், சனிக்கிழமை விரதமிருந்து, கருங்குவளை மலர் தூவி, எள் அன்னம் படைத்து, சனி காயத்ரியை 26 முறை பாராயணம் செய்வதுடன், சனி பகவானின் வாகனமான காகத்துக்கு அன்னம் அளித்து வந்தால், சனி தோஷம் நிவர்த்தி ஆகும்.

ராகு:

ராகுவினால் தோஷம் ஏற்பட்டால், ராகு தசை மற்றும் புக்தி காலங்களில் வெள்ளிக்கிழமை விரதமிருந்து, ராகு காலத்தில் மந்தாரை மலரால் ராகுவுக்கு அர்ச்சனை செய்து, உளுந்து கலந்த அன்னம் நைவேத்தியம் செய்வதுடன், துர்கை அம்மனை வழிபட வேண்டும்.

கேது:

கேதுவினால் தோஷம் ஏற்பட்டால், கேது தசை மற்றும் புக்தி காலங்களில் திங்கட்கிழமை விரதமிருந்து பல வகையான மலர்களால் கேது பகவானுக்கு அர்ச்சனை செய்து, சித்ரான்னம் நைவேத்தியம் செய்ய வேண்டும். தொடர்ந்து விநாயகரை வழிபட்டாலும் கேது தோஷங்கள் விலகும்.

ஒவ்வொரு கிரக மூர்த்தியையும் அவருக்குரிய நாளில் முறைப்படி வழிபடுவதால், நவகிரகங்களின் நல்லருள் கிடைக்கும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

strysko344@mailxu.com