சென்னையில் நவகிரக தலங்கள்

சென்னை நகருக்குள் நவகிரக தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு அமைந்திருக்கிறது.  ஒரே நாளில் தரிசிக்கக்கூடியதாக இந்தப் பயணம் அமைகிறது. தனிப்பட்ட முறையிலும் இந்தத் தலங்களை நூற்றுக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகிறார்கள்.

1. கொளப்பாக்கம் – அகத்தீஸ்வரர் – சூரியன்
2. சோமங்கலம் – சோமநாதீஸ்வரர் – சந்திரன்
3. பூவிருந்தவல்லி – ஸ்ரீவைத்தீஸ்வரர் – அங்காரகன்
4. கோவூர் – சௌந்தரேஸ்வரர் – புதன்
5. போரூர் – ராமநாதேஸ்வரர் – குரு
6. மாங்காடு – வெள்ளீஸ்வரர் – சுக்ரன்
7.பொழிச்சலூர் – ஸ்ரீஅகத்தீஸ்வரர் – சனி
8. குன்றத்தூர் – ஸ்ரீநாகேஸ்வரர் – ராகு
9. கெருகம்பாக்கம் – ஸ்ரீநீலகண்டேஸ்வரர் – கேது

1. சூரியத் தலம் – கொளப்பாக்கம்

நவகிரகங்களுள் சூரியனே மையம் ஆவார். ஜோதிடத்தில் சூரியனை ஆத்மகாரகன் என்று அழைப்பர். தந்தை, அரசாங்க பதவி, ஆட்சி, கண்கள், தலை போன்ற முக்கிய விஷயங்களை ஒருவரின் தனிப்பட்ட ஜாதகத்தில் சூரியன்தான் தீர்மானிக்கிறார். சூரியன் சரியான நிலையில் இல்லையெனில் மேலே சொல்லப்பட்ட விஷயங்களில் பிரச்னைகள் வரும். எனவே, நவகிரகங்களுக்குள் சூரியனுக்கென்று அமைந்துள்ள கொளப்பாக்கம் தலத்தை தரிசிக்கும்போது அத்தகையபிரச்னைகள் அகலுகின்றன. இத்தல இறைவன் அகத்தீஸ்வரர். இறைவி ஆனந்தவல்லி. 1300 ஆண்டுகள் பழமையான தலம் இது.

தனி சந்நதியில் சூரிய பகவான். அவர் கருவறையின் மேல், ஏழு குதிரைகள் பூட்டிய ஒற்றைச் சக்கர ரதத்தை அவர் செலுத்தும் சுதைச்சிற்பம், கண்களைக் கவர்கிறது. ஈசனை நோக்கிய வண்ணம் தரிசனம் அளிக்கும் இவர், இத்தலத்தில் பிரதானமாக வழிபடப்படுகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் சூரியபகவானுக்கு சிவப்பு நிற ஆடை அணிவித்து, சிவப்பு நிற மலர்களால் அர்ச்சனை செய்து, அவருக்கு உரிய தானியமான கோதுமையை அவர் காலடிகளில் சமர்ப்பித்து மனமுருக வேண்டி சூரிய தோஷங்கள் நீங்கப் பெறுகின்றனர்.

ராம-ராவண யுத்தத்தின்போது ராவணனை மாய்க்க ராமருக்கு உதவ நினைத்த அகத்தியர், ஆதித்ய ஹ்ருதயம் எனும் மகத்தான சூரிய துதியை ராமருக்கு உபதேசித்தார். ராமபிரானும் அதை நம்பிக்கையுடன் பாராயணம் செய்து, சோர்வும், மன அழுத்தமும் நீங்கப் பெற்று, ராவணனை வென்றார். இன்றும் உடல், மனநல பாதிப்புடையவர்கள் நம்பிக்கையுடன் ஆதித்ய ஹ்ருதய துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் அந்த பாதிப்புகள் கட்டாயம் நீங்கிவிடும்.

அரசமரத்தை தலவிருட்சமாகக் கொண்ட ஆலயம் இது. தல தீர்த்தம், அம்ருத புஷ்கரணி. பிரதோஷ நாட்களிலும், சிவராத்திரி நேரங்களிலும் பக்தர்கள் இத்தலம் வந்து, அம்மை-அப்பர் அருளோடு சூரிய பகவானின் திருவருளையும் பெறுகின்றனர். கொளப்பாக்கம் சென்னையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், போரூர் சந்திப்பிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவிலும் உள்ளது. ராமாவரத்திலிருந்தும் இத்தலத்தை அடையலாம்.

2. சந்திரத் தலம் – சோமங்கலம்

நவகிரகங்களில் சந்திரனை மனோகாரகன் என்பார்கள். மனதை தீர்மானிப்பதில் சந்திரனுக்கு முக்கிய பங்கு உண்டு. ஜாதகத்தில் சந்திரன் சரியில்லையென்றால் அல்லது அசுப கிரகங்களின் சேர்க்கை பெற்றிருந்தால் மன உளைச்சல், மனநிலை சரியில்லாதிருத்தல் போன்ற பிரச்னை உருவாகும், புலம்பும்படியான வாழ்க்கை அமையும். எனவே, சந்திரனை தரிசித்தால் மனோபலம் அதிகமாகும். அப்படிபட்ட சந்திரனுக்கான தலமே சோமங்கலம். ஏனெனில் சந்திரனே இத்தலத்திலுள்ள ஈசனை பூஜித்து தமது தோஷத்தை நிவர்த்தி செய்து கொண்டிருக்கிறானாம்!

தட்சன் தன் இருபத்தேழு பெண்களை சந்திரனுக்கு மணமுடித்தான். ஆனால், சந்திரன் ரோகிணியை மட்டும் குளுமையாய் பார்த்தான்; மற்ற பெண்களை குறையோடு நோக்கினான். அதனால் அவர்கள் மனம் குன்றிப் போனார்கள். தந்தையிடம் வந்து முறையிட்டார்கள். ‘‘உனக்கு செருக்கை அளிக்கும் உன் அழகு குலையட்டும். உன் சக்தி, உன் பிரகாசம் மங்கட்டும்’’ என்று தட்சன் கடுமையாய் சபித்தான். உடனே சந்திரன் எனும் சோமன் ஒளிமங்கி கருமையாய் தேய ஆரம்பித்தான். மிரண்டுபோய் தட்சனின் பாதம் பணிந்தான். மனமிரங்கினான் தட்சன். “தொண்டை மண்டலத்தில் சுயம்புவாய் நிற்கும் சிவனை நோக்கி தவம் செய்து வா. இந்த சாபம் தீரலாம்” என்றான்.

அப்படியே சிவனை பூஜித்தான் சந்திரன். சிவனும் காட்சி தந்தார். “தட்சன் சாபம் இட்டது இட்டதுதான். ஆகவே நீ முற்றிலும் தேயாது, தேய்ந்தும், மறைந்தும் ஒரு வட்ட சுழற்சியில் வா. அது உலக உயிர்களுக்கு நன்மை புரியட்டும்” என்றார் ஈசன். சந்திரன் அதை சந்தோஷத்தோடு ஏற்றான். அப்படி சந்திரன் பூஜித்து சாபநிவர்த்தி பெற்ற தலமே சோமங்கலம். அதனாலேயே இங்குள்ள ஈசனுக்கு சோமநாதர் என்று பெயர். அம்பிகை காமாட்சி. சந்திரன் இங்கு தனிச் சந்நதியில் அருட்பாலிக்கிறார். இங்கு ஈசன் சோமநாதரையும் சந்திரனையும் தரிசித்தாலே மனம் உறுதி பெறும்; தடுமாற்றங்கள் நீங்கும். குலோத்துங்கச் சோழன் கஜபிருஷ்ட விமான அமைப்போடு அமைத்த அற்புதமான கோயில் இது. சென்னை, தாம்பரத்திலிருந்தும், குன்றத்தூரிலிருந்தும் இக்கோயிலுக்குச் செல்லலாம். இரண்டு ஊர்களிலிருந்தும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவு.

3. செவ்வாய் தலம் – பூவிருந்தவல்லி

நவகிரகங்களுக்குள் செவ்வாயை பூமிகாரகன் என்று அழைப்பர். வீடு, மனை, நிலம், சகோதரர் நிலை, நிர்வாகம், பூர்வீகச் சொத்து, ரத்தம், எலும்பு, காவல்-ராணுவத்தில் வேலை, குழந்தைப்பேறு, சொந்தத்தில் திருமணம் என்று பலவிஷயங்களை செவ்வாய்தான் தீர்மானிக்கிறார். ஒருவருடைய சொந்த ஜாதகத்தில் செவ்வாய் நிலை சரியாக அமையாவிடின் மேற்கண்ட விஷயங்களில் பிரச்னைகள் ஏற்படும். அந்த பிரச்னைகள் தீர்வடைய பூந்தமல்லி வைத்தியநாதரையும், செவ்வாய் எனும் அங்காரக பகவானையும் தரிசிக்கலாம்.

சென்னை பூவிருந்தவல்லியில் தையல் நாயகி அம்மை உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. சாபம் பெற்ற இந்திரனுடைய சருமநோயை தீர்த்து மோட்சமே அருளிய தலம் இது. அங்காரகன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தால் அதாவது பலம் குறைந்ததால் இத்தல ஈசனை தரிசித்தான். மேலும், அங்காரகன் வாயு ரூபமாக, தாளிப்பனையின் கீழிருந்தவாறு சிவனை வழிபட்டான். இத்தலத்திலுள்ள மங்கள தீர்த்தத்தில் நீராடி முழு வலிமை பெற்றான். நாற்புறமும் அழகிய திருமதில்கள் கோயிலை அணி செய்கின்றன.

கிழக்கு வாயிலில் சிறிய அளவில் ஒரு ராஜகோபுரமும் அதன் எதிரிலேயே அருமையும், பெருமையும் மிக்க மங்கள தீர்த்தமும் அமைந்துள்ளன. உள்ளே நுழைந்தவுடன் கொடிமரமும், இன்னும் உள்ளே சென்றால் விழாக்காலங்களில் சுவாமி எழுந்தருள அழகிய மேடை ஒன்றும் இங்கே அமையப் பெற்றுள்ளன. இந்த மேடையில்தான் சனி பகவான் எழுந்தருளியிருக்கிறார். அவருக்கு நேரே கருவறைக்குள் வைத்தியநாதர் தண்ணிலவாக தரிசனமளிக்கிறார். தையல்நாயகி அம்மை சந்நதியில் அருள் வெள்ளம் பெருக்கெடுத்துப் பொங்குகிறது. கருவறையின் வலதுபுறத்தில் மோதகம் தாங்கிய விநாயகப் பெருமானும், இடதுபுறம் அங்காரகனின் சந்நதியும் அமைந்துள்ளன.

தாளிப்பானையின் கீழே அங்காரகன் அருவமாக பூஜிக்கும் விதமாக சிவலிங்கமும், திருவடிகளும் உள்ளன. செவ்வாய்க் கிழமைகளில் இங்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. செவ்வாய் தோஷத்தால் திருமணத் தடை கண்டவர்கள் இங்கு வந்து பிரார்த்தித்துக்கொண்டு, வெகுவிரைவிலேயே மணமாலையோடு நன்றி சொல்ல திரும்பவும் கோயிலுக்கு வருகின்றனர். ஆண்டுதோறும் மாசி திங்கள் 21, 22, 23, 24, 25 தேதிகளில் கிழக்கு கோபுரம் வழியே சூரியனின் செம்பொற்சோதியானது இறைவனின் திருமேனியின் மீது பொழிவது கண்கொள்ளாக் காட்சி. சென்னை பூவிருந்தவல்லி நகரத்தின் மையத்திலேயே இந்த ஆலயம் அமைந்துள்ளது.

4. புதன் தலம் – கோவூர்

நவகிரகங்களில் புதன் முக்கியத்துவம் வாய்ந்தவர். புத்தி கூர்மை, எதிலும் வேகம், சாதூர்யமான பேச்சு, குழப்பமின்றி முடிவெடுத்தல், அலங்காரத்தில் ஆர்வம், கணக்கு, நவீன ஆராய்ச்சி என்று எல்லா விஷயங்களுக்கும் புதன்தான் காரணம். ஒருவர் ஜாதகத்தில் புதன் சரியில்லையெனில் குழப்பம், ஞாபகமறதி மிக்கவராகவும், எதிலும் ஆர்வமில்லாதவராகவும், மந்த புத்தியோடும் இருப்பார். ஜாதகத்தில் புதன் சரியில்லையென்றால், கோவூர் தலத்தில் அருட்பாலிக்கும் சுந்தரேஸ்வரரையும், சௌந்தராம்பிகையையும் வழிபட, புத்தி சுடர்விட்டு பிரகாசிக்கும்.

சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் இத்தல இறைவன் மீது கோவூர் பஞ்சரத்னம் பாடி சிறப்பித்துள்ளார். தேவேந்திரனின் ஐராவதம் எனும் யானை அகழ்ந்து உருவாக்கி, நீராடிய ஐராவத தீர்த்தம், சிவகங்கை என அழைக்கப்படுகிறது. கயிலாயத்துக்கு ஒப்பான இத்தலத்தின் தலவிருட்சம், மகாவில்வம். இது 9, 16, 27 தளங்கள் கொண்டது. இந்த இலைகள் மகாசக்தி படைத்தவை. இத்தலத்தில் புதன் ஈசனோடு இணைந்த அம்சமாக விளங்குகிறார். அதனால், புதனுக்கு தனி சந்நதியில்லை. மூலவரை வணங்கினாலே போதும்.

கோயிலுக்குள் வலப்புறமாக கருவறையில் சுந்தரேஸ்வரர் அருள் வெளிச்சம் பரப்புகிறார். பசுவடிவ பார்வதிதேவிக்கு சிவபெருமான் சிவலிங்கத் திருமேனியராக காட்சிதந்து அருளியதால் திருமேனீச்சுரம் என்று பெயர். இதுமட்டுமல்லாது அன்னை காமாட்சி மாங்காடு தலத்தில் செய்த தவத்தால் மூவுலகும் வெம்மையால் கொதித்தது. அந்த கணத்தில் மகாலட்சுமி காமதேனுவாக இவ்வூரில் தங்கி தேவர்களுக்கு குளிர்நிழலும், அருள்நிழலும் தந்தமையால் இவ்வூரை கோவூர் என அழைத்தனர்.

ஆலயத்தில் சூரியன், நால்வர், காளிகாம்பாள், வீரபத்திரர், தட்சிணாமூர்த்தி சோமாஸ்கந்தர், சுக்கிரவார அம்மன், லிங்கோத்பவர், கருணாகரப் பெருமாள் உற்சவர், முருகன்-வள்ளி-தெய்வானை, துர்க்கை என எல்லோரையும் தரிசிக்கலாம். அம்பாள் கருவறையைச் சுற்றிலும் வாராஹி, வைஷ்ணவி, மகாலட்சுமி, பிராம்மி, துர்கி, சண்டேஸ்வரி, பைரவர் ஆகியோரை தரிசிக்கலாம். அம்பாளை தரிசித்து வெளியே வந்தால் புதனின் நட்பு கிரகமான சனி பகவானை அக்னி மூலையில் தரிசிக்கலாம். சென்னை போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லும் வழியில் 5 கி.மீ. தொலைவில் கோவூர் அமைந்துள்ளது.

5. குரு தலம் – போரூர்

நவகிரகங்களில், குரு தனிச்சிறப்பு மிக்கவர். குரு என்றாலே இருட்டை நீக்குபவர் என்று பொருள். கல்வி, கலை, ஆராய்ச்சி, திருமணம், ஆன்மிகம், மரபு சார்ந்த விஷயங்கள், அமைதி, கௌரவப் பதவி, ஒழுக்கம் போன்ற விஷயங்களை குருபகவான்தான் அருளுகிறார். குரு ஜாதகத்தில் சரியான நிலையில் இல்லாதோர், போரூர் ராமநாதீஸ்வரர் தலத்திற்கு வந்தால், நிம்மதியான வாழ்க்கையை மேற்கொள்ளலாம்.ராமபிரான் இங்கிருந்து போருக்குப் புறப்பட்டதால் இத்தலம் போரூர் என வழங்கப்படுகிறது. ராவணனால் கடத்தப்பட்ட சீதாதேவியைத் தேடி வந்தபோது, இப்பகுதியில் ஈசனை தவமிருந்து தரிசித்து அவர் அறிவுரையின்படி ராமேஸ்வரம் சென்று ராமநாதரை தரிசித்து அவர் அருளால் சீதையை மீட்டார் ராமன்.

ராமபிரானுக்கு குருவாக போரூர் ஈசன் விளங்கியதால், இத்தலம் குரு தலமாக போற்றப்படுகிறது. குரு பகவானுக்கு உரிய பூஜைமுறைகள் யாவும் இந்த ராமநாதருக்கு செய்யப்படுகிறது. ராமேஸ்வரம் போலவே இங்கும் விபூதியுடன் பச்சைக்கற்பூரமும், ஏலக்காயும் மணக்கும் தீர்த்தமும் பிரசாதமாகக் கிடைக்கிறது; அதோடு, பக்தர்களின் தலையில் சடாரி சாத்தும் மரபும் உள்ளது. ஆலயத்துள் அம்பிகை சிவகாமசுந்தரிக்கு தனி சந்நதி. ஈசன் கருவறை முன் உள்ள மகாமண்டப விதானத்தில் ராசிச் சக்கரம் வரையப்பட்டுள்ளது. சந்தான விஜயகணபதி, வள்ளி-தேவசேனா சமேத சுப்ரமண்யர், பைரவர், சண்டிகேஸ்வரர், சனிபகவான், தத்தமது மனைவியருடன், தத்தமது வாகனங்களில் நவகிரகங்கள் என தெய்வத் திருவுருவங்கள் அருள்கின்றன.

ராமபிரானின் திருவடிகளை இத்தலத்தில் தரிசிக்கலாம். தலவிருட்சமான நெல்லி மரத்தின் கீழ் அமர்ந்து பக்தர்கள் தியானம் செய்கிறார்கள் குருதசை, குருபுக்தி, ஜாதகத்தில் லக்னத்தில் குரு, குரு தோஷம் என்று பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து 11 வாரங்கள் இத்தல ஈசனுக்கு நெய்விளக்கேற்றி 11ம் வாரம் கடலை சுண்டல், தயிர் சாதம் நிவேதித்தால் பிரச்னைகள் ஒன்றுமே இல்லாமல் போய்விடுகிறது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கை. போரூர் சந்திப்பிற்கு அருகில் குன்றத்தூர் மின்வாரிய அலுவலகத்தைக் கடந்து இடதுபுறம் சென்றால் இத்தலத்தை அடையலாம்.

6. சுக்கிரன் தலம் – மாங்காடு

‘‘சுக்கிர தசைய்யா அவருக்கு. அதான் சக்கைப்போடு போடறாரு’’ என்று சொல்வார்கள். ஆம், சுக்கிரனுடைய அருட்பார்வை குடிசைவாசியையும் குபேரனாக்கும். ஆய கலைகளுக்கும் அதிபதியே சுக்கிரன்தான். கலைத்துறையில் வெற்றி பெற இவர் பார்வை போதும். அழகையும், வசீகரத்தையும், செல்வ வளத்தையும் அருள்வதில் நிகரற்றவர். அந்த சுக்கிரனுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிராச்சாரியார் வழிபட்ட தலமே மாங்காடு வெள்ளீஸ்வரர் கோயில்.

திருமால் வாமன அவதாரமெடுத்து மகாபலிச் சக்ரவர்த்தியிடம் மூன்றடி மண் தானமாகக் கேட்டதும், சக்ரவர்த்தியின் குரு சுக்கிராச்சாரியார், மன்னனைத் தடுத்ததும், முடிவில் மன்னனின் மனதை மாற்ற முடியாததால் தானே வண்டாக உருவெடுத்து தானமளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் நீர் வார்க்கும் கெண்டியின் வாயை அடைத்துக் கொண்டதும், வாமனனான திருமால் ஒரு தர்ப்பைப் புல்லால் அந்த வாயைக் குத்த, உள்ளே வண்டுருவில் இருந்த சுக்கிராச்சாரியார் பார்வையிழந்ததும் புராண சம்பவங்கள்.

மூன்றடி மண் கேட்ட திருமால் மூவுலகையும் அளந்தார். இதற்குப் பிறகு சுக்கிராச்சாரியார் தன் பார்வை மீள, திருமாலை பிரார்த்தித்துக் கொண்டார். பெருமாளும், ‘மாங்காடு தலத்தில் பஞ்சாக்னி மத்தியில் தவமிருக்கும் பார்வதி தேவிக்கு தரிசனம் கொடுக்க ஈசன் அங்கு வருவார். அப்போது அவரை தரிசித்து இழந்த பார்வையை பெறலாம்,’’ என்று அருளினார். அதன்படியே சுக்கிராச்சாரியார் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து அனுதினமும் பூஜிக்க, பார்வதிதேவியை மணம் புரிய அங்கே தோன்றிய ஈசன், சுக்கிராச்சாரியாருக்கும் அருளி அவர் பார்வையை மீட்டுக் கொடுத்தார்.

அத்தகைய சுக்கிராச்சாரியார் பூஜித்த இத்தலத்தை தரிசிப்பவர்களுக்கு சுக்கிரனின் பூரண அருள் கிட்டும். சுக்கிராச்சாரியார் பூஜித்ததால் இறைவனை தமிழில் வெள்ளீஸ்வரர் என்றும், சமஸ்கிருதத்தில் பார்க்கவேஸ்வரர் என்றும் அழைத்தனர். பார்வை குறைபாடுள்ளோர், ஏன், பார்வை இழந்தவரும்கூட வெள்ளீஸ்வரரை அகக்கண்களால் தரிசித்து, மீண்டும் வந்து புறக்கண்களால் தரிசிக்கும் பாக்கியத்தை பெறுகின்றனர்! ஐந்து வெள்ளிக்கிழமைகளில் அல்லது பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திர நாட்களில் சுக்கிரனுக்கு பரிகார பூஜைகள் செய்யப்படுகின்றன. இத்தலம் மாங்காடு காமாட்சி அம்மன் கோயிலுக்கு வெகு அருகில் உள்ளது.

7. சனி தலம் – பொழிச்சலூர்

நவகிரகங்களில் சனீஸ்வரர் தனிச்சிறப்பு பெற்றவர். இவர் பிடிக்கிறார் என்றால் எல்லோருக்குமே கலக்கம்தான். ஆனால், ஒட்டுமொத்தமாக அப்படி பயப்படவேண்டியதில்லை. ஏனெனில், தர்ம நியாயங்களையும், நீதியையும் சீர்தூக்கிப் பார்த்து தீர்ப்பளிக்கும் நீதிதேவன் இவர். அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் இவர் உச்சமாகிறார். ஆனாலும், சனிபகவானுடைய சோதனையை தாங்க முடியாதவர்களும், சனியின் எதிர்மறை பார்வை பெற்ற ஜாதகர்களும் வழிபட வரவேண்டியது பொழிச்சலூர் அகஸ்தீஸ்வரர் ஆலயத்துக்கு.
அகத்தியர் பொதிகை நோக்கி நதியோரமாக பயணப்பட்டபோது தர்ப்பைப் புற்களை நீரில் இட்டு விடுவாராம்.

அவை எங்கெல்லாம் ஒதுங்குகின்றனவோ, அவ்விடங்களிலெல்லாம் சுயம்பு சிவலிங்கமோ அல்லது ஏற்கனவே பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமோ தரிசனம் தருமாம். அப்படி இல்லாத இடங்களில் இவரே ஒரு லிங்கத்தை நிறுவிவிட்டு தன் தீர்த்த யாத்திரையை தொடர்வாராம். அப்படி அகஸ்தியர் வழிபட்ட லிங்கம் உள்ள ஒரு கோயில் பொழிச்சலூரில் உள்ளது. இவ்வூர் பூம்பொழிலோடு மலர்ந்திருந்ததால் பொழில் சேரூர் என்றும் வழங்கப்பட்டது. தொண்டைநாட்டு நவகிரகத் தலங்களில் சனி பகவானுக்குரிய பரிகாரத் தலமாக இது விளங்குகிறது. இத்தலத்தில் வேளாளர் ஒருவர் விவசாயம் செய்தபோது ஏர் முனையில் ஒரு லிங்கம் தட்டுப்பட்டது.

அச்சிவலிங்கத்தையே அங்கு நிறுவி வழிபட்டு வந்தார்கள். அகத்தியர் இத்தலத்தின் பெருஞ் சக்தியால் ஈர்க்கப்பட்டு சுயம்புவாய் நின்ற ஆதிசிவனை பூஜித்து சில காலம் இங்கேயே தங்கினார். மூலவர் சந்நதி விமானம், யானையின் பின்பக்கம் போன்ற (கஜப்ருஷ்ட) தோற்றம் கொண்டிருக்கிறது. கோயிலின் முகப்பு மண்டப வாயிலிலிருந்து நேராக நோக்கினால் பிரதானமாக அகஸ்தீஸ்வரர் கிழக்கு நோக்கியும், சற்று தள்ளி இடப்பக்கமாக ஆனந்தவல்லி அம்பிகை தெற்குப்புறம் நோக்கியும், தனித்தனி சந்நதிகளில் அருளாட்சி செய்கிறார்கள்.

இத்தலத்தின் பிரதானமானவர், சனீஸ்வர பகவான்தான். சனீஸ்வர பகவானே இங்குள்ள சிவனை பூஜித்து, நள்ளாறு தீர்த்தத்தில் நீராடியதால் தன் தோஷம் நீங்கப்பெற்று, தனிச் சந்நதி கொண்டு அருட் பாலிக்கிறார். எனவே, இவ்வூர் வடதிருநள்ளாறு என்று வழங்கப்படுகிறது. ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் பக்தர்கள் நூற்றுக்கணக்கில் கூடுகிறார்கள். திருநள்ளாருக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு வந்து தோஷப் பரிகாரம் செய்து மகிழ்வோடு திரும்புகின்றனர். இங்குள்ள தீர்த்தத்திற்கும் நள்ளார் தீர்த்தம் என்றே பெயர். சென்னையை அடுத்த பல்லாவரத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் பொழிச்சலூர் எனும் ஊரில் உள்ளது இக்கோயில்.

8. ராகு தலம் – குன்றத்தூர்

நவகிரகங்களில் ராகு பகவானை யோககாரகன் என்று அழைப்பர். ‘அவருக்கு யோகம் அடிக்குது’ என்று சொல்லக் கேட்டிருப்போம். அந்த யோககாலத்தை உருவாக்குபவரே ராகுதான். திருமணம், லாபம், வெளிநாடு செல்லும் வாய்ப்பு, யோகா, தியானம், கெட்ட சகவாசத்திலிருந்தும், தீய பழக்க வழக்கத்திலிருந்தும் மீள்வது போன்ற எல்லாமே ராகு பகவான் அருளால் முடியும். ஒரு ஜாதகத்தில் ராகு சரியான நிலையில் இல்லையெனில் வாழ்க்கையில் பல துன்பங்களை அடுக்கடுக்காக சந்திக்க வேண்டியிருக்கும். வேதனையும், வெறுப்பும் அதிகமிருக்கும். இவை நீங்கி நிம்மதியாக வாழ குன்றத்தூர் தலத்திலுள்ள நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

ஈடு இணையற்ற பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் அவதாரத் தலம் இது. சேக்கிழார் பெருமான், சோழ தேசத்தில் அமைச்சராக இருந்தபோது கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமியை தரிசிப்பதை பெரும் பேறாகக் கருதினார். இப்படியொரு ஆலயத்தை தம் சொந்த ஊரில் அமைக்க ஆவல் கொண்டு அதை நிறைவேற்றி மனநிறைவு கண்டார். இத்தலத்தை வடநாகேஸ்வரம் என்று அழைத்தனர். இத்தலத்தில் நாகத்தின் கீழ் லிங்க உருவில் காட்சி தருகிறார் ஈசன்.

கோயிலினுள் சேக்கிழார் பெருமான் சந்நதி அமைந்துள்ளது. கருவறையில் நாகேஸ்வரர் அருள் பொழிகிறார். தலைப்பகுதியில் சிறிதளவு பின்னப்பட்டிருந்ததால் நாகேஸ்வரரை திருக்குளத்தில் இட்டு அருணாசலேஸ்வரரை மூலவராக பிரதிஷ்டை செய்ய முடிவெடுத்தனர், சிவனடியார்கள். நாகேஸ்வரர் சேக்கிழார் பிரதிஷ்டை செய்ததல்லவா? அதனால் குளம் திடீரென ரத்தச் சிவப்பாயிற்று. சிவனடியார் கனவில் ‘பழையபடி மூலவர் இருக்குமிடத்திலேயே நாகேஸ்வரரையும் பிரதிஷ்டை செய்யுங்கள்’ என்று இடப்பட்ட உத்தரவுக்கிணங்க பக்தர்கள் மீண்டும் அருணாசலேஸ்வரரை பிராகாரத்திலும், நாகேஸ்வரரை மூலவராகவும் பிரதிஷ்டை செய்தனர்.

பிராகாரத்தில் வள்ளி-தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமியும் பிராகார முடிவில் காமாட்சி அம்மனும் தரிசனம் தருகிறார்கள். நாகேஸ்வரர் எனும் நாமத்தோடு அருட்பாலிப்பதாலும், ராகுவின் அம்சத்தோடு ஈசன் விளங்குவதாலும் ராகு தோஷம், காலசர்ப்ப தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபடலாம். இன்றும் சர்ப்பங்கள் இரவில் இறைவனை வழிபட்டு வருவதாகக் கூறுகின்றனர். தாம்பரம், கோயம்பேடு, பூவிருந்தவல்லியிலிருந்து குன்றத்தூருக்கு பேருந்து வசதிகள் உள்ளன.

9. கேது தலம் – கெருகம்பாக்கம்

நவகிரகங்களில் கேதுவை ஞானகாரகன் என்று அழைப்பர். தெளிவற்ற, நிம்மதியற்ற எந்த ஒரு குறிக்கோளும் இல்லாது வாழ்பவர்கள் கேதுவின் அருளால் சட்டென்று ஞானப் பாதைக்குத் திரும்புவார்கள். கேது சரியில்லை எனில் திருமண வாழ்க்கையில் பிரச்னைகள் வரும்; எந்த காரியமானாலும் அலைச்சலுடன்தான் முடிப்பர். எனவே கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரரை தரிசிக்கும்போது கேதுவினால் ஏற்படும் பிரச்னைகள் தீரும். இக்கோயிலில் கேதுபகவானை தனி சந்நதியில் தரிசிக்கலாம். இரு நாகங்கள் பின்னிப் பிணைந்த நிலையில், நடுவில் காளிங்க நர்த்தன கண்ணன் வடிவில் இவர் அருட்பாலிக்கிறார்.

எமகண்ட வேளை கேதுவிற்கு உரியது என்பதால் இவர் சந்நதியில் செய்யப்படும் எமகண்டவேளை பூஜைகள் விசேஷம். கோயிலில் முதலில் தரிசனம் தருகிறார் ஆதிகாமாட்சி. ஐந்தரை அடி உயரத்தில் அன்பே வடிவாய் திருக்காட்சி அளிக்கிறாள் அன்னை. மூலக் கருவறையில் ஈசன், நீலகண்டேஸ்வரராக அருள்கிறார். அமிர்தம் பெற வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது, வலி தாங்காமல் வாசுகி நஞ்சைக் கக்கியது. பாற்கடலில் இருந்தும் நஞ்சு தோன்றியது. இரண்டும் சேர்ந்து ஆலாலம் எனும் கொடிய விஷமாய் மாறின. யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக அந்த நஞ்சை சட்டென விழுங்கினார் பரமேஸ்வரன்.

அதைக் கண்டு பதைபதைத்த பார்வதி, அந்த நஞ்சு, அவருடைய தொண்டையைவிட்டுக் கீழே இறங்காதபடி அதை ஈசனின் கண்டத்திலேயே நிறுத்தினாள். ஈசன் நீலகண்டேஸ்வரர் ஆனார். ஈசனுக்கும் நந்திக்கும் இடையே உள்ள மேல் விதானத்தில், சூரியனை கேது விழுங்குவது போல் ஒரு சிற்பம் காணப்படுகிறது. இதன் கீழ் நின்று ஈசனையும் அம்பிகையையும் மனமுருக வேண்டினால் கேதுவின் கெடுபலன்கள் குறைகின்றன. நவகிரகநாயகர்களின் சந்நதியின் மேல் விதானத்திலும் சூரியனை கேது விழுங்கும் சிற்பம் உள்ளது. சென்னை, போரூர்-குன்றத்தூர் பாதையில் கெருகம்பாக்கத்தில் உள்ளது, இந்த ஆலயம். போரூர் சந்திப்பில் இருந்து 3 கி.மீ தொலைவு.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

klaman@mailxu.com hevessy_ervin@mailxu.com