நவகிரகங்களை வழிபடும் முறையும்… அதன் பலன்களும்…!

கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவகிரகங்களை வழிபடுவது எப்படி என்பதுதான். ஏனெனில் நவகிரகங்களை வழிபடும்போது சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களை இடமிருந்து வலமாக சுற்ற வேண்டும். இதேபோல  ராகுவையும் கேதுவையும் வலமிருந்து இடமாக சுற்ற வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். மேலும் இப்படி சுற்றுவது சரிதானா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. உண்மையில் நவகிரகங்களை இப்படித்தான் சுற்ற வேண்டுமா… நவகிரக வழிபாடு முறை சிறப்பாக அமைய என்ன செய்ய வேண்டும்… அப்படி சுற்றும்போது என்னென்ன பலன்கள் கிடைக்கும் போன்ற சந்தேகங்களுக்கு விளக்கமாக பதில்

ஒவ்வொருவருடைய பூர்வ புண்ணியத்தின்படி, அவரவர் ஜாதகத்தில் கிரகநிலை அமைந்திருக்கும். எல்லாருக்கும் ஜாதகத்தில் நவகிரகங்கள் எல்லாமே சாதகமாக அமைந்திருக்க வாய்ப்பில்லை. இதனால் நவகிரக தோஷங்களிலிருந்து விடுபட கோயிலை நோக்கி புறப்படுகிறோம். அங்கு சென்று வழிபட்டு திரும்பும்போது, மன நிம்மதி கிடைக்கிறது. ஆனால் அப்படி கோயிலுக்குச் சென்று நவகிரகங்களை வழிபடுவதில் இன்னமும் பல்வேறு விதமான குழப்பங்களும், சந்தேகங்களும் பக்தர்களிடையே நிலவி வருகிறது.

குறிப்பாக நவகிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும் என்ற தவறான கருத்து பக்தர்களிடையே பரவி வருகிறது.

சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை. எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும் என்றும் ராகுவும் கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை. எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும் என்றும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. இது தவறான கருத்து.

எனவே, இடம், வலம் என்ற கருத்தை மனதில் கொள்ள வேண்டியதில்லை. நவகிரகங்களைச் சேர்த்து ஒன்பது முறை சுற்றினாலே போதும்.  அதேபோல எல்லா தெய்வங்களையும் வணங்கிவிட்டு கடைசியாக நவகிரகங்களை சுற்றி வருவதுதான் முறையாகும். எந்த கிரகத்தையும்  கையால் தொட்டு வணங்கக் கூடாது என்பதும் ஐதீகமாக உள்ளது.

 

கிரக வழிபாடும் பலன்களும்… 

சூரியனை வழிபட்டால்  வாழ்வில் மங்களமும், ஆரோக்கியமும் கிடைக்கும்.

சந்திரனை வணங்கினால் புகழ் கிடைக்கும்.

செவ்வாயை  (அங்காரன்)  வழிபட்டால் தைரியம் அதிகரிக்கும்.

புதனை வழிபட்டால் நற்புத்தி கிடைக்கும்; அறிவாற்றல் பெருகும்.

குரு பகவானை (வியாழன்) வணங்கினால் செல்வமும் புத்திர பாக்கியமும் கிடைக்கும்.

சுக்கிரனை வணங்கினால் நல்ல மனைவி அமையும், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

சனி பகவான் வழிபட்டால் ஆயுள் பலம்பெறும்.

ராகுவை வணங்கினால் பயணத்தால் நன்மை கிடைக்கும்.

கேதுவை வணங்கினால் ஞானம் பெருகும்; மோட்சம் கிடைக்கும்; ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும்.

கிழமைக்கு ஏற்றவாறு அந்தந்த  கிரகத்துக்கு உரிய கடவுளை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

பலன் தரும் பாடல்

திருஞானசம்பந்தரின் ‘கோளறு திருப்பதிகத்தின் முதல் பாடல்:

வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன்
மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள்கங்கை முடிமேல் அணிந்தென்
உளமே புகுந்த அதனால்
ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழன் வெள்ளி
சனிபாம்பு இரண்டும் உடனே
ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல
அடியார் அவர்க்கு மிகவே. 

இந்தப்பாடலை நவகிரகங்களை சுற்றிய பிறகு கோயில் பிராகாரத்தில் அமர்ந்து, மனதிற்குள் பாராயணம் செய்தால் நவகிரக தோஷங்கள் விலகும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

pacitto-christian@mailxu.com githens.bernie@mailxu.com