நவக்கிரக தோ‌ஷங்களை நீக்கும் பரிகாரம்

ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோ‌ஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோ‌ஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம்.

இப்போது எல்லாம் சின்ன கோவில்களில் கூட, நவக்கிரகங்கள் கொண்ட சன்னிதி பிரதிஷ்டை செய்து விட்டனர். முன்பு கிராமங்களில் அம்மன் கோவில் என்றால் அம்மன் சிலை தான் இருக்கும். இப்போது அங்கும் பரிவார தெய்வங்கள், நவக்கிரக சன்னிதி என்று வைத்து விட்டனர். கோவிலுக்கு செல்பவர்கள் அங்குள்ள நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபட்டால், அந்த நவநாயகர்களின் அருள் கிடைக்கும் என்று அதீத நம்பிக்கை வைத்து உள்ளனர். சிலருக்கு ஜாதக ரீதியாக குறிப்பிட்ட நவக்கிரகங்களால் ஏற்பட்ட தோ‌ஷம் காரணமாக நற்செயல்கள் கூடி வருவது தள்ளிப் போகலாம். சிலர் கஷ்டங்களை அனுபவிக்கலாம். இவற்றை போக்க கிரக தோ‌ஷ பரிகாரங்களை மேற்கொள்ளலாம். அது பற்றி பார்ப்போம்:–

சூரிய தோ‌ஷம்

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் நவக்கிரகங்கள் அமைந்து இருக்கும் திருத்தலத்துக்கு சென்று, அங்குள்ள சூரிய பகவானை மனம் உருகி வழிபட வேண்டும். அப்போது சூரிய பகவானுக்கு சிவப்பு வஸ்திரம் (ஆடை) அணிவித்து, சூரிய மந்திரம் சொல்லி அபிஷேகம் செய்யலாம். வெள்ளருக்கு சுள்ளியால் யாகத் தீ வளர்த்து கோதுமை, சர்க்கரை பொங்கல் ஆகுதி செய்து தீபாராதனை செய்து வழிபட்டால் சூரிய தோ‌ஷத்தில் இருந்து விடுபடலாம்.

சந்திர தோ‌ஷம்

திங்கட்கிழமை தோறும் சந்திரனை வழிபட வேண்டும். வெள்ளை வஸ்திரமும், முத்துமாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் வெள்ளை அரளி, வெள்ளை அல்லிப்பூ ஆகியவற்றை அணிவித்து சந்திர மந்திரங்களை கூறி வழிபட வேண்டும். முருங்கை மரக்குச்சிகளை கொண்டு யாகத்தீ வளர்க்க வேண்டும். அதில் பச்சரிசி, பால் சோறு, தயிர்சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சந்திரதோ‌ஷம் நீங்கும்.

செவ்வாய் தோ‌ஷம்

ஒருவருக்கு ஜாதக ரீதியில் செவ்வாய்தோ‌ஷம் இருக் கிறது என்றால் அவரது திருமண காரியங்கள் தள்ளி போகும். அந்த செவ்வாய்தோ‌ஷம் நீங்க பரிகாரம் செய்தால் அந்த அங்காரக பகவானின் அருள் கிடைத்து நாம் மேற்கொண்ட நற்காரியம் கைகூட வழி உண்டு. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமைகளிலும் தவறாமல் கோவில்களுக்கு சென்று செவ்வாய் கிரகமான அங்காரக பகவானை வழிபட வேண்டும். சிவப்பு வஸ்திரம், பவள மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் செவ்வரளி மாலை அலங்காரம் செய்து அங்காரக மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும். கருங்காலி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து துவரம் பருப்புப்பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூரம் காட்டி வழிபட்டால் கிரக தோ‌ஷ பரிகாரம் நீங்கும்.

புதன் தோ‌ஷம்

புதன்கிழமைகளில் புதன்பகவானுக்கு பச்சை வஸ்திரம், மரகத மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் மாலை அணிவித்து புதன் மந்திரங்களை சொல்லி வழிபடலாம். நாயுருவி குச்சிகளால் யாகத்தீ வளர்த்து, பாசிப்பருப்பு பொடி சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி புதன் மந்திரங்களை உச்சரித்து வழிபட்டால் தோ‌ஷம் விலகும்.

குரு தோ‌ஷம்

ஒவ்வொரு வியாழக்கிழமைகளிலும் சிவன்கோவில் களுக்கு செல்லலாம். அங்கு மூலவர் சன்னிதிக்கு வலதுபுறம் உள்ள தட்சிணாமூர்த்தியை வழிபடலாம். இல்லையெனில் அருகே உள்ள நவக்கிரகங்கள் கொண்ட திருத்தலத்துக்கு சென்று அங்குள்ள குருபகவானை தரிசிக்கலாம்.

அன்றைய தினம் மஞ்சள்நிற வஸ்திரம், புஷ்பராக மணிமாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்முல்லை மலர் மாலை அணிவித்து, குரு மந்திரங்களை சொல்லி வழிபடலாம். அரச மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து அதில் கடலைப்பொடி சாதம், எலுமிச்சை சாதத்தை ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் குருதோ‌ஷம் விலகும்.

சுக்ர தோ‌ஷம்

வெள்ளிக்கிழமைகளில் சுக்ரனுக்கு வெள்ளை வஸ்திரம், வைர மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் வெண்தாமரை மலர் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். அத்தி மரக்குச்சிகளால் யாகம் வளர்த்து, மொச்சைப்பொடி சாதம், தயிர் சாதம் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சுக்ரதோ‌ஷம் நீங்கும்.

சனி தோ‌ஷம்

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் சனி பகவானுக்கு கருப்பு வஸ்திரம், நீலக்கல் மாலை அணிவித்து வழி படலாம். இல்லையெனில் டிசம்பர் மாத பூமாலை அணிவித்து வழி படலாம். வன்னிமரக் குச்சிகளால் யாகத்தீ வளர்த்து எள்ளுப்பொடி சாதம், எள் ஆகியவற்றை ஆகுதி செய்து வழிபட்டால் சனி தோ‌ஷம் நீங்கும்.

ராகு தோ‌ஷம்

ஏதாவது ஒரு நாளில் ராகுபகவானுக்கு நீல வஸ்திரம், கோமேதக மாலை அணிவித்து வழிபடலாம். இல்லையெனில் இலுப்பைப்பூ மாலை அணிவித்து அருகம்புல்லால் யாகத்தீ வளர்த்து, அதில் உளுந்து, உளுந்துப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து கற்பூர ஆரத்தி காட்டி வழிபட்டால் ராகு தோ‌ஷம் நீங்கும்.

கேது தோ‌ஷம்

இந்த தோ‌ஷத்தையும் எந்த ஒரு நாளிலும் பரிகாரம் செய்து விடுபட்டு கொள்ளலாம். கேது பகவானுக்கு பல வண்ண ஆடை, வைடூரிய மாலை அணிவித்து வழிபட வேண்டும். இது முடியாதவர்கள் செவ்வரளி பூ அலங்காரம் செய்து தரிசிக்க வேண்டும். தர்ப்பைப் புல்லால் யாகத்தீ வளர்த்து கொள்ளு, கொள்ளுப்பொடி சாதம் ஆகியவற்றால் ஆகுதி செய்து வழிபட்டால் தோ‌ஷம் நிவர்த்தி ஆகும்.

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *

keely339@mailxu.com